இதோ நமக்குச் சமாதானம்

10:13 PM Unknown 0 Comments

பாவத்தின் பாரம், வியாதியின் வேதனை, சுற்றி நெருக்கும் பிரச்சினைகள் இவைகளால் கலங்கித் தவிக்கும் சமுதாயத் தையே நாம் இன்று பார்க்கின்றோம். பஞ்சு மெத்தையில் புரளும் பெரிய செல்வந்தன் முதல் கூலி வேலை செய்யும் பரம ஏழை வரை “சமாதானம் இல்லையே” என ஏங்கித் தவிப்பதைக் காண்கின்றோம்.

இளைப்பாறுதல் எங்கே கிடைக்கும்? யார் எனக்குச் சமாதானம் தருவார்கள்? சமாதானத்தைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? என ஓடி அலையும் மக்களையும், அதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் மக்களையும் இன்று அதிகமாகப் பார்க்கின்றோம். தலைமுறை தலைமுறையாய், ஆண்டுக் கணக்காக அலைந்தும் இந்த சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளாமல் அங்கலாய்க்கும் மக்களுக்கு, இந்த உலகத்தை சிருஷ்டித்த தேவாதி தேவனே தேடி வந்து சமாதானத்தை, இளைப்பா றுதலைக் கொடுக்கத் தீர்மானித்தார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலுள்ள இஸ்ரவேல் என்னும் நாட்டில் நம்மைப்போல் சாதாரண மனிதனாக இயேசு என்ற பெயரில் அவதரித்தார்.

இவர் இந்த உலகத்தில் உலாவின நாட்களில் பாவம், வியாதி, பிரச்சினை, கண்ணீ, இவைகளில் கலங்கித் தவிக்கும் மக்களுக்கு இளைப்பாறுதலைத் தருவதற்காகத் தான் வந்திருப்பதை உணர்ந்து, இளைப்பாறுதலற்று தவிக்கும் சமுதாயத்திற்கு ஒரு அறைகூவலைக் கொடு த்தார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28) என்று அவர் கொடுத்த அன்பின் அழைப்பைக் கேட்டு, பல விதங்களிலும் சமாதானத்திற்கு ஏங்கும் மக்கள் அவரிடம் சென் றார்கள். ஒருமுறை, பயங்கரமான பாவத்தில் அடிமைப்பட்டு தன் வாழ்க்கையை நஷ்டப்படுத்தின ஒரு பெண் இந்த இயேசுவின் அழைப்பைக்கேட்டு, அவரிடம் வந்தாள்.

எந்தப் பாவம் தனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று எண்ணியிருந்தாளோ அதே பாவம் அவள் சமாதானத்தை குலைத்துப்போட்டது. நீ பாவி என்று சமுதாயம் அவளைத் தள்ளியது. பாவத்திலிருந்து எனக்கு விடுதலை, சமாதானம் வேண்டும், என்று இயேசுவின் பாதத்தில் விழுந்து தன் பாவத்திற்காக கண்ணீர் சிந்திய அவளை, ‘என்னிடத்தில் வருகிறவளை நான் புறம்பே தள்ளுவதில்லை’ என்ற இயேசுகிறிஸ்து அன்போடு ஏற்றுக்கொண்டார். அவள் பாவத்தை மன்னித்தார். சமாதானத்தைக் கொடுத்தார். பாவபாரம் நீங்கி மிகுந்த மகிழ்ச்சியோடு அவள் திரும்பிச் சென்றாள். மற்றொரு முறை குஷ்டரோகி ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, ‘என்னை சுகமாக்க உம்மால் ஆகும்’ என்று வேண்டிக் கொண்டான். இந்தக் கொடிய வியாதியினிமித்தமாக சமுதாயத்தால் புறக்கனிக்கப்பட்ட அவன் சமாதானமற்று வேதனையோடு நாட்களைக் கழித்தான். அவனது வேதனைகளை அறிந்து கொண்ட இயேசு, தன் அன்பின் கரங்களால் அவனை அணைத்துக் கொண்டார். தம் அற்புத வல்லமையினால் அந்த வியாதியை சுகமாக்கி சமாதானத்தோடு அவனை அனுப்பினார்.

வேறொரு முறை, தாய் தகப்பனில்லாத இரண்டு அநாதைப் பெண்கள் தங்களுக்கு ஆதாரமாக இருந்த ஒரே சகோதரனையும்  மரணத்தில் இழந்து, இனி நம்மைக் கவனிக்க இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?’ என கண்ணீர் சிந்திய போது, இளைப்பாறுதல் அளிக்கும் இயேசுவிடம் வந்து வேதனையை கூறினார்கள். அவர்கள் கண்ணீரைக் கண்டு மனதுருகின இயேசு அவர்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்து மரித்த சகோதரனை உயிரோடு எழுப்பி அவர்கள் கண்ணீரைத் துடைத்தார்.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் அன்பு நண்பனே! இன்று நீயும் பாவத்திற்கும், கெட்ட பழக்கத்திற்கும் அடிமைப்பட்டு சமாதானமில்லாமல் தவிக்கிறாயா? “என்னிடத்தில் வா இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு உன்னை அழைக்கிறார். பாவத்தினிமித்தமாக வந்த கொடிய வியாதியினால் வேதனைப் படுகிறாயா? சகல வியாதிகளையும் சுகமாக்கும் வல்லமை பொருந்திய இயேசு, “என்னிடத்தில் வா, உன் கண்ணீரைத் துடைப்பேன்” என இன்று உன்னை அழைக்கிறார். இயேசு தான், எனக்கு சமாதானம் கொடுக்க முடியுமா? என நீயே யோசிக்கலாம். ஆம்! இயேசு மாத்திரம் தான் உனக்கு மெய்யான நிலையான சமாதானத்தைக் கொடுக்க முடியும். காரணம், ‘இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை’ என்று எல்லா வேதங்களும் கூறுகிறபடி மனிதனுடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தின ஒரே ஒரு ஆண்டவர் இயேசு மாத்திரமே.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. (ஏசாயா 53:5)

உன் பாவங்களுக்காகத் தன் இரத்தத்தை சிந்தினவர் இயேசு மாத்திரமே உனக்கு சமாதானத்தைக் கொடுக்க உன் பாவங்களைச் சிலுவையில் சுமந்தவர் இயேசு மாத்திரமே! ஆகவே அவர் மாத்திரமே உன் பாவங்களை மன்னிக்க முடியும். உனக்கு மெய் சமாதானத்தைக் கொடுக்க முடியும். சிலுவையில் உனக்காக மரித்த இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இன்றும் அவர் உயிரோடிருக்கிறார். உன் இருதயத்தின் கதவைத் தட்டுகிறார். அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக்கொள். ‘இயேசுவே நீரே எனக்காக மாரித்தீர், உயிர்த் தெழுந்தீர், நான் பாவிதான். என் உள்ளத்தில் வாரும். என் பாவங்களை மன்னியும் வியாதியை போக்கும், கண்ணீரைத் துடையும், நிலையான சமாதானத்தைத் தாரும் என்று நீ உண்மையோடு ஜெபிப்பாயானால் உன் உள்ளத்தில் வருவார். உன் வாழ்க்கையை மாற்றுவார். மெய்ச்சமாதானத்தைத் தருவார். இந்த இயேசுவை அசட்டை செய்வாயானால் அவர் மறுபடியும் நியாயாதிபதியாய் உலகத்தில் வரும்போது நீ வெட்கப்பட்டு கலங்குவாய்.

மோட்சம் செல்ல இயேசுவைத் தவிர வேறு வழியே இல்லை.
           
இன்றே இயேசுவின் அன்பின் கரத்திற்குள் வந்துவிடு.
   

மேலதிக தொடர்புகளுக்கு:
Rev.குகன்ராஜதுரை
கிழக்கிலங்கை சுவிஷேச பணி  - மட்டக்களப்பு

# எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் #

# எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் #